Sunday 19 December 2021

சலூன் கடைக்கும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நீட் தேர்வு பிரச்னைக்கும் ஒரு வரலாற்றுத்தொடர்பு இருக்கிறது என சொன்னால் யாராவது நம்புவார்களா...?!  நம்பிதான் ஆகவேண்டும். ஏனெனில், அதுதான் உண்மை!

ஆதிகாலத்தில் மருத்துவ தொழில் செய்துவந்த ஓர் இனத்தை , தற்போது முடிதிருத்தும் ஓர் இனமாக மாற்றியவர் யார்..? இந்த சூழலுக்குள் எப்படி அவர்கள் தள்ளப்பட்டார்கள்..? எனும் நெடிய வரலாறை அறிந்தால் இந்த நீட் தேர்வு , எவ்வளவு பெரிய அநீதி எனும் விஷயத்தையும் உள்வாங்கிக்கொள்ளலாம்.

‌#யார் இந்த மருத்துவர்கள்?

ஆதிகாலங்களில் முடிவெட்டுவதற்கென தனி ஆட்களோ குழுக்களோ இருந்திருக்கவில்லை. அவர்கட்குள்ளேயேதான் அதைக் கவனித்து வந்துள்ளனர். தற்போது முடி திருத்துபவர்களாக அறியப்படுகிறவர்கள் அப்போது மருத்துவத் தொழில்களை  பார்த்துவந்துள்ளனர். அதில் சிலர் மருத்துவம் மட்டுமில்லாது அத்துடன் அரசவை விகடகவி, பஞ்சாங்கம் , வானியல் சாஸ்திரங்கள் போன்றவற்றை கணிக்கிற பண்டிதர்கள், பூசாரி முதலான ஐந்து வகை தொழில்களை செய்துவந்துள்ளனர். இதனால் ஐந்துவகை பட்டயங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, 'ஐம்பட்டயர்' எனவும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஐம்பட்டயர் என்கிற சொல்லே பின்னாட்களில் 'அம்பட்டயர்' என மாறியதாக சொல்லப்படுவதுண்டு.

பூசை வேலைகள் செய்கிறவர்களை பட்டர் என அழைக்கும் வழக்கமும் இருந்ததால் ஆதிப்பட்டர்களாக அறியப்பட்ட இவர்கள் வழக்கு திரிந்து அம்பட்டர் என அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்தானது நிலவிவருகிறது. 

அரசவையில் மன்னர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும், மேலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்களாகவும், நாவன்மையுடன் பேசுபவர்கள் எனும் காரணங்களாலும் இவர்களை முறையே பண்டிதர், நாவிதர் எனும் சிறப்பு பெயர்களுடனும் அழைத்தமைக்கான சான்றும் இருக்கிறது.

‌#முடிதிருத்த ஆரம்பித்தது எப்படி?

மருத்துவம் மட்டுமே முதன்மைத்தொழிலாக பார்த்துவந்த இவர்கள் போர்க்காலங்களில் தாக்குண்டு வரும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பார்கள். காது மூக்கு முதலியன கிழிந்து கோரமாக வரும் வீரர்களுக்கு , கைதேர்ந்த இந்த மருத்துவர்களால் அக்காலத்திலேயே அறுவை சிகிச்சைகள் நடந்ததாகவும், அவைதான் இந்தியாவில் நிகழ்ந்த முதல் அறுவை சிகிச்சை எனவும் பல வரலாற்றுத்தகவல்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது மருத்துவமனைகளில் தையல் போடும் செவிலியர்கள் காயம்பட்ட இடத்தில் முடி இருந்தால் அதை நீக்கிவிட்டு தையல் போடுகிறார்கள் இல்லையா... அதுபோல்தான் அக்காலத்தில் சில வீரர்களுக்கு தையல் போடும்போது, காயம்பட்ட இடத்திலுள்ள முடிகளையும் நீக்கி தையல்போட்டுள்ளனர். ஆக, இப்படியாகத்தான் முதன்முதலில் அவர்களின் கைகளில் அந்த கத்தி புகுத்தப்படுகிறது. ஆனாலும் அப்போதுவரைக்கும் எந்த பெரிய சிக்கலும் அவர்களுக்கு இருந்திருக்கவேயில்லை.

‌#ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சி

அதற்குப்பின்னே சைவ , வைணவ மதங்கள் சமண மற்றும் புத்த மதங்களை அழித்துக்கட்டி பார்ப்பனீயம் தலைவிரித்து ஆட ஆரம்பித்த காலத்தில்தான் மருத்துவர்களுக்கு இந்த பிரச்னை தொடங்குகிறது.

மற்றவர்களிடமிருந்து தாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக அறியப்படவேண்டும் என இப்போது போலவே அப்போதும் கருதிய சில  பார்ப்பனர்கள், தலையின் முன்பகுதி முடியை மழித்துக்கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போதைய அதிகாரமானது பார்ப்பனர் கையிலே இருந்ததாலும், பார்ப்பனர்களுக்கு தலை மழிப்பது இறைவனுக்கு செய்கிற தொண்டு என நம்பவைக்கப்பட்டதாலும் வேறுவழியின்றி மருத்துவர்களும் பார்ப்பனர்களுக்கு முன்தலை முடியை மட்டும்  மழித்து வந்துள்ளார்கள்.

இப்படியாக முடிவெட்ட துவங்கிய மருத்துவர்களின் வீழ்ச்சி பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினர் சூழ்ச்சியால் அதன்பின்னர் ரொம்பவே மோசமான நிலைக்கு சென்றது.

நோய், பிணி நீக்க பகவானுக்கு பரிகாரங்களை செய்கிறோம் எனவும் தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் எனவும் சொல்லி பணம்பறித்து வந்த அக்கும்பலுக்கு எளிய முறையில் மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்த ஆதிமருத்துவர்கள் பெரிய இடையூறாக இருந்தனர்.

இதை எப்படி கையாள்வது என யோசித்த பார்ப்பனீயம் மருத்துவ தொழிலை அவர்களிடமிருந்து பிரிக்க திட்டம் தீட்டியது. அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம் தீண்டாமை . அந்த தீண்டாமையை வலுவாக்க, இந்த ஆதிமருத்துவர்கள், முடி மட்டுமே வெட்டவேண்டும் எனக்கூறியதுடன் அவர்கள் முடிவெட்டவே ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள் என பரப்புரை செய்தது.

தொடர்ந்து அவமதிப்பது, புறக்கணிப்பது, தம்மையே அண்டிப் பிழைக்குமாறு மற்றவரின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்குவது தீண்டாமையை நியாயப்படுத்தும் ஒரு தத்துவ விளக்கத்தை உருவாக்கி பரப்புரை செய்வது போன்ற வழிமுறைகளில்தான் சாதிய அடுக்குகள் இங்கே வேரூன்றியது. மேலும்  அறிவுசார் தொழில்களை லாவகமாக ஆதிக்க சாதிகள் கையகப்படுத்துவதும் அக்காலங்களில் தொடர்ந்துகொண்டிருந்தது. இவை இந்த
மருத்துவ சமூகத்தையும் விட்டுவைக்கவில்லை.

பார்ப்பனர்களின் முன்தலை முடியை  மழிக்க பணிக்கப்பட்டு, பிறகு பிணங்களுக்கும் சவரம் செய்யும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். கால்களைக் கழுவிவிடுவது, ஈமக்காரியங்கள் செய்வது மாதிரியான தமது வக்கிரங்களை நிறைவேற்றித்தரும் இழிநிலைக்கு மருத்துவர்களை ஆட்படுத்திவிட்டு பின் அதே காரணங்களைச் சொல்லி அவர்களை தீண்டத்தகாதாராக்கினர். (இன்னும் மோசமான சில வேலைகளை செய்யவும் பணிக்கப்பட்டனர். ஒவ்வாமை கருதி அவை இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது) பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்கசாதியினர் நகரங்களுக்கு பெயர்ந்து போய்விட்ட நிலையில் கிராமத்திலுள்ள இடைநிலைச் சாதிகள் அந்த ஒடுக்குமுறைகளை கையாள ஆரம்பித்தனர்.

உழைப்புக்கு ஊதியமாக ஊர்ச்சோறு எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை உருவாக்கியதன் மூலம் மருத்துவர்கள் தன் அடுத்தவேளை கஞ்சிக்கு ஆதிக்கசாதியினரையே அண்டி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும்  ஊரில் ஆதிக்க சாதிக்கு சவரம் செய்பவர்கள் தலித்களுக்கு சவரம் செய்யக்கூடாது எனவும் பணிக்கப்பட்டனர். மேலும் தலித்துகளுக்கு சவரம் செய்ய தனியாக ஆட்களை நியமித்தனர்.  தலித்துகளுக்கு சவரம் செய்கிற பிரிவினரை சாதி அடுக்கில் மருத்துவர்களைவிட கீழான நிலையில் வைத்தனர்.

(இதுபோன்று ஒவ்வொரு சாதிக்கு கீழேயும் ஒரு சாதியை வைத்து கட்டமைக்கப்பட்ட நூதன சாதிய கட்டமைப்புகளால்தான், தனக்கு கீழேயும் ஒரு சாதி இருக்கிறது எனும் வெற்று பெருமிதத்தில் சாதியம் இங்கே வெற்றிகரமாக இன்னமும் அழியாது இயங்கி வருகிறது. சாதிய ஒடுக்குமுறைகளும் நிகழ்கிறது)

மருத்துவ சமூகத்தினரின் பரம்பரை மருத்துவ அறிவை ஒழித்துக்கட்டும் ஆதிக்கசாதி வெறிக்கு பிரிட்டிஷ் காலனியாட்சி புகுத்திய அலோபதி மருத்துவமுறையும் உதவியது. அலோபதியை கைக்கொண்ட ஆதிக்கசாதியினர், பாரம்பரிய மருத்துவ அறிவையே இழிவானதாக சித்தரித்தனர். இதன்வழியாக பாரம்பரியமாக செய்து வந்த மருத்துவ வேலையை அவர்களால் தொடர முடியவில்லை. வேறு  வழியின்றி ஆதிக்கசாதியினரின் வீடுகளுக்குப் போய் அல்லது ஆற்றங்கரைகளில் காத்துக் கிடந்து தொழில் செய்துவந்த அவர்கள் பின்னாட்களில் காலனியாட்சியைப் பயன்படுத்தி தற்போதிருக்கிற சலூன்களை தொடங்கினர். இப்படியாக தொடங்கியதுதான் இந்த தொழில் .

ஆதிமருத்துவர்களிடமிருந்து சூழ்ச்சிகளால் மருத்துவ அறிவு பிடுங்கப்பட்டு எப்படி வேறு வேலைக்கு பணிக்கப்பட்டார்களோ அதைப்போலவே பணம் கொழிக்கும் தற்போதைய மருத்துவ தொழிலை குறிப்பிட்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும் எனும் நோக்கத்திலே செய்யப்படும் சூழ்ச்சிகளே இந்த நீட் தேர்வு மாதிரியான விஷயங்கள். 

ஆகவே இவைபோன்ற மற்றோர் வரலாற்றுத் துரோகமானது நிகழாதபடி இவ்விஷயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டியது முக்கியம்

No comments:

Post a Comment

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்க...